டெல்லி : இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் முன்னணி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்த ஆண்டுப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஒரு மிகப்பெரிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் மொத்தம் 10 புதிய பைக்குகளை சந்தையில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதில் ஏற்கனவே (Pulsar N160 S, N160 SS, and Pulsar 125 and Pulsar 150) 4 பைக்குகள் அறிமுகமாகிவிட்ட நிலையில், அடுத்தடுத்து வரவிருக்கும் புதிய மாடல்கள், என்எஸ் (NS) சீரிஸ் அப்டேட்கள், பஜாஜின் முதல் அட்வென்ச்சர் (ADV) பைக் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
ஏற்கனவே வெளியான 4 புதிய பைக்குகள்
பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் சீரிஸை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சமீபத்திய வாரங்களில் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் முதல் கட்டமாக பல்சர் N சீரிஸில் N160 S மற்றும் N160 SS ஆகிய இரண்டு புதிய மாடல்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அதேபோல், நீண்ட காலமாக வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக உள்ள கிளாசிக் பல்சர் சீரிஸிலும் புதிய தலைமுறை பல்சர் 125 மற்றும் பல்சர் 150 ஆகிய மாடல்கள் நவீன வசதிகள் மற்றும் அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் 4 புதிய பல்சர் பைக்குகளை பஜாஜ் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த 4 மாடல்களுடன் பஜாஜின் புதிய பல்சர் திட்டம் முடிவடையவில்லை. அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதத்திற்குள் மேலும் 6 புதிய பைக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பல்வேறு விலை பிரிவுகளில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து, பல்சர் சீரிஸின் சந்தை நிலையை மேலும் வலுப்படுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளது.
அடுத்து வரவிருக்கும் பல்சர் என்எஸ் (Pulsar NS) சீரிஸ் பைக்குகள்
தற்போது என் சீரிஸ் மற்றும் கிளாசிக் மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டுவிட்டதால், அடுத்ததாக இளைஞர்களின் மனம் கவர்ந்த பல்சர் என்எஸ் (Pulsar NS) சீரிஸ் பைக்குகள் புதுப்பிக்கப்பட உள்ளன. தற்போது என்எஸ் சீரிஸில் NS125, NS160, NS200 மற்றும் NS400Z ஆகிய மாடல்கள் உள்ளன. இதில் அதிக விற்பனையாகும் என்ட்ரி-லெவல் மாடல்களான புதிய NS125 மற்றும் NS160 பைக்குகள் முதலில் புதிய அம்சங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்சர் என்எஸ் பைக்குகள் அவற்றின் ஆக்ரோஷமான வடிவமைப்பு, மஸ்குலர் டேங்க், அண்டர்பெல்லி எக்ஸாஸ்ட் மற்றும் அதிக வேகம் தரும் எஞ்சின் ஆற்றலுக்காகப் பெயர் பெற்றவை. இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள 'பெரிமீட்டர் ஃபிரேம்' (Perimeter Frame) வளைவுகளில் பைக்கை மிகவும் துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் திருப்ப உதவுகிறது. தினசரி பயன்பாட்டிற்கும், ஸ்போர்ட்டி ஓட்டுதல் உணர்விற்கும் இந்த பைக்குகள் மிகச் சிறந்த தேர்வாக விளங்குகின்றன.
முதல் அட்வென்ச்சர் (ADV) பைக் வருகை
பழைய மாடல்களின் அப்டேட்டுகள் தவிர, பஜாஜ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு புதிய 'அட்வென்ச்சர் (ADV)' ரக பைக்கைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.
சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த பைக், பிரேசிலில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அறிமுகமாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே இது இந்தியச் சந்தையில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
- எஞ்சின் திறன்: இந்த அட்வென்ச்சர் பைக் 250cc பிரிவில் நிலைநிறுத்தப்படலாம். இதில் பல்சர் N250 பைக்கில் இருக்கும் அதே 249cc ஏர்/ஆயில்-கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
- முக்கிய வசதிகள்: இதில் முழு டிஜிட்டல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் உயரமான எக்ஸாஸ்ட் (High-mounted exhaust) போன்ற சாகச பயணத்திற்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- சந்தைப் போட்டி: இந்த பைக் சந்தைக்கு வரும்போது, ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 (Hero Xpulse 210), சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் (Suzuki V-Strom SX) மற்றும் யெஸ்டி அட்வென்ச்சர் (Yezdi Adventure) ஆகிய மாடல்களுக்குக் கடுமையான போட்டியாக இருக்கும்.
பல்சரின் அசுர விற்பனை சாதனை
பஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மாதாந்திர இருசக்கர வாகன விற்பனையில், பல்சர் பிராண்ட் மட்டுமே சுமார் 44% பங்கை வகிக்கிறது. இதில் 125cc முதல் 200cc வரையிலான பல்சர் மாடல்களே அதிகளவில் விற்பனையாகின்றன.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் பல்சர் தொடர்ந்து முன்னணி இடம் பிடித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 66,156 பல்சர் பைக்குகள் விற்பனையாகி, 10% சந்தைப் பங்குடன் இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
