டெல்லி : இந்திய இருசக்கர வாகனச் சந்தையின் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தனது புகழ்பெற்ற அப்பாச்சி மற்றும் ரோனின் பைக் வரிசைகளில் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மிரட்டலான புதிய கலர் ஆப்ஷன்களுடன் எக்கச்சக்கமான புதிய டாப் வேரியண்ட்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.பண்டிகைக் கால விற்பனையைக் குறிவைத்து பஜாஜ் மற்றும் ஹீரோ நிறுவனங்களுக்குப் போட்டிப் போடும் நோக்கில் இந்த அதிரடி மாடல்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல்களின் இன்ஜின் போன்ற மெக்கானிக்கல் அமைப்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள கார் போன்ற அதிநவீன வசதிகள், விலை மற்றும் மைலேஜ் விபரங்களை பற்றி பார்ப்போம்.
புதிய டாப் வேரியண்ட்டில் டிவிஎஸ் அப்பாச்சி RTR 160
இளைஞர்களின் நீண்ட கால ஃபேவரிட் மாடலான டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கில், புதிய டாப்-ஸ்பெக் (Top-spec) வேரியண்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,27,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய டாப் மாடலில், அவசரக் காலங்களில் வழுக்கலான சாலைகளில் வண்டி சறுக்காமல் தடுக்கக்கூடிய 'டிராக்ஷன் கன்ட்ரோல்' (Traction Control) பாதுகாப்பு வசதி, அவசர எச்சரிக்கைக்கான 'ஹஸார்ட் விளக்குகள்' (Hazard lights) மற்றும் ஸ்டைலான நவீன 'எல்இடி இண்டிகேட்டர்கள்' (LED turn indicators) ஆகியவை தரநிலையாக அள்ளி வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 45 முதல் 48 கிலோமீட்டர் வரை சிறந்த மைலேஜை வாரி வழங்கும் என்பதால் தினசரி ஆபீஸ் மற்றும் கல்லூரி செல்பவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான சாய்ஸ் ஆகும்.
RTR 160 4V மற்றும் RTR 200 4V
அப்பாச்சி குடும்பத்தின் 4-வால்வு மாடல்களான RTR 160 4V மற்றும் RTR 200 4V ஆகிய இரண்டு பைக்குகளிலுமே புத்தம் புதிய டாப் வேரியண்ட்கள் லான்ச் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு பைக்குகளிலுமே கார் போன்ற அலாதியான கூகுள் மேப்ஸ் மிரரிங் (Google Maps Mirroring) நேவிகேஷன் தொழில்நுட்பம், திடீரென கடுமையான பிரேக் பிடித்தால் பின்னாடி வரும் வாகனங்களை எச்சரிக்கும் 'பேனிக் பிரேக் அலர்ட்' (Panic Brake Alert), மொபைல் சார்ஜ் செய்ய 'டைப்-சி சார்ஜிங் போர்ட்' மற்றும் பார்ப்பதற்கே செம ஸ்போர்ட்டியாக இருக்கும் 'வண்ணமயமான அலாய் வீல்கள்' (Coloured alloy wheels) ஆகிய அதிரடி வசதிகள் கூட்டாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
விலையைப் பொறுத்தவரை, புதிய அப்பாச்சி RTR 160 4V டாப் மாடலின் விலை ரூ.1,41,440 என்றும், அப்பாச்சி RTR 200 4V டாப் மாடலின் விலை ரூ.1,49,990 என்றும் எக்ஸ்-ஷோரூம் படி கச்சிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மைலேஜைப் பொறுத்தவரை, 160 4V மாடல் லிட்டருக்கு 45 கிமீ வரையிலும், பவர்ஃபுல்லான 200 4V மாடல் லிட்டருக்கு 38 முதல் 42 கிமீ வரையிலும் மைலேஜ் வழங்கும்.
மிரட்டும் அப்பாச்சி RR 310 & RTR 310 பிளாக் டைமண்ட் எடிஷன்
டிவிஎஸ் நிறுவனத்தின் பிரீமியம் சூப்பர்பைக் பிரிவில் இருக்கும் அப்பாச்சி RR 310 மற்றும் நேக்கட் ஸ்டைல் RTR 310 ஆகிய இரண்டு பைக்குகளிலும் அக்ரசிவ் லுக் கொண்ட புத்தம் புதிய பிளாக் டைமண்ட் எடிஷன் (Black Diamond Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் முழுமையான ஆல்-பிளாக் (All-black) நிறக் கலவையில், வெள்ளை நிற அப்பாச்சி பேட்ஜ்கள் மற்றும் ஆக்ரோஷமான சிவப்பு நிற ஹைலைட்களுடன் பார்ப்பதற்கே ஒரு முரட்டுத்தனமான அசுரன் போலக் காட்சியளிக்கின்றன.
இந்த எடிஷனின் மிகப்பெரிய உலகத்தர சிறப்பம்சமே, இதில் கொடுக்கப்பட்டுள்ள சாவி இல்லாத இக்னிஷன் (Keyless Ignition) தொழில்நுட்பம்தான். இதன் மூலம் சாவியைப் பயன்படுத்தாமலேயே பட்டன் மூலம் வண்டியை ஸ்மார்ட்டாக ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். விலையைப் பொறுத்தவரை, RR 310 பிளாக் பேட்ஜ் மாடலின் விலை ரூ.2,87,790 என்றும், RTR 310 பிளாக் பேட்ஜ் மாடலின் விலை ரூ.2,48,990 என்றும் பிரீமியம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை லிட்டருக்கு 28 முதல் 32 கிமீ வரை மைலேஜ் தரும்.
4 புதிய மாஸ் வேரியண்ட்களுடன் புதுப்பிக்கப்பட்ட டிவிஎஸ் ரோனின் (TVS Ronin)
ரெட்ரோ மாடர்ன் ஸ்டைல் விரும்பிகளுக்காக டிவிஎஸ் ரோனின் பைக் வரிசை தற்பொழுது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு பேஸ், பேஸ் பிளஸ், மிட் மற்றும் டாப் (Base, Base Plus, Mid, Top) என மொத்தம் நான்கு புதிய வேரியண்ட்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை பேஸ் (Base) மாடலின் விலை ரூ.1,30,290 ஆகும். இதில் புதிதாக லான்ச் செய்யப்பட்டுள்ள பேஸ் பிளஸ் (Base Plus) மாடலானது ரூ.1,42,490 விலையில், அவசரத்திற்குப் பாதுகாப்பான 'டூயல்-சேனல் ஏபிஎஸ்' (Dual-channel ABS) பிரேக்கிங் வசதியுடன் 'சன்லிட் யெல்லோ' மற்றும் 'டெசர்ட் மிராஜ்' ஆகிய இரண்டு மாஸ் கலர்களில் கிடைக்கிறது.
இதன் நடுத்தர மிட் (Mid) வேரியண்ட் ரூ.1,51,540 விலையில் டைப்-சி சார்ஜர் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் கனெக்டிவிட்டி வசதிகளுடனும், இதனுடைய உச்சக்கட்ட டாப் (Top) வேரியண்ட் ரூ.1,63,640 விலையில் டைப்-சி போர்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் பாதுகாப்பு மற்றும் முற்றிலும் புதிய சொகுசு சீட் அமைப்புடன் அள்ளி வழங்கப்பட்டுள்ளது. இந்த 225cc ரோனின் பைக்குகள் லாங் ரைடு மற்றும் சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ப லிட்டருக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை மிகச் சிறந்த மைலேஜை வாரி வழங்கும்.
