TVS வாடிக்கையாளர்களுக்கு ஷாக்... பிரபல பைக்குகள் & ஸ்கூட்டர்களின் விலை உயர்வு!

Jupiter, Raider, iQube உள்ளிட்ட மாடல்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், Ntorq 125 மட்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company), தனது பல்வேறு பிரபல ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விலையை மாற்றியமைத்துள்ளது. அதன்படி, ஜுபிடர், ஐகியூப், ஆர்பிட்டர் மற்றும் ரைடர் போன்ற முன்னணி மாடல்களின் விலைகள் ரூ.550 முதல் ரூ.13,580 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

அதேவேளையில், வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், மிகவும் பிரபலமான ஸ்போர்ட்டி ஸ்கூட்டரான டிவிஎஸ் என்டார்க் 125-ன் விலை அனைத்து வேரியன்ட்களிலும் ரூ.1,650 வரை குறைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஜுபிடர் 110 மற்றும் 125 விலை உயர்வு விவரங்கள்

tvs நிறுவனத்தின் மிகவும் பிரபலமான குடும்ப ஸ்கூட்டரான டிவிஎஸ் ஜுபிடர் 110-ன் டிரம் (Drum) வேரியன்ட்டின் விலை ரூ.575 உயர்த்தப்பட்டு, புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.73,975 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ.1,950 அதிகரித்து, தற்போது ரூ.88,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஜுபிடர் 125-ன் டிரம் அலாய் வேரியன்ட்டின் விலை ரூ.2,410 அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ.81,110 என மாற்றப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐகியூப் மற்றும் ஆர்பிட்டர் விலை நிலவரம்

அதிக அளவில் விற்பனையாகும் மின்சார இருசக்கர வாகனமான டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube) ஸ்கூட்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 2.2 kWh பேட்டரி கொண்ட வேரியன்ட்டின் விலை ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதன் டாப்-ஸ்பெக் ST 5.3 kWh வேரியன்ட்டின் விலை அதிகபட்சமாக ரூ.10,400 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ.1,72,384 ஆக உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, டிவிஎஸ் ஆர்பிட்டர் (TVS Orbiter) சீரிஸ் விலையில் மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் V1 மாடலின் விலை ரூ.7,000 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆர்பிட்டர் V2 மாடலின் விலை மிகப் பெரிய அளவில் ரூ.13,580 அதிகரிக்கப்பட்டு, இதன் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,18,480 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 விலை உயர்வு

கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் பிரிவில் இளைஞர்களின் பேராதரவைப் பெற்றுள்ள டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125) பைக்கின் டிரம் மற்றும் சிங்கிள்-சீட் வேரியன்ட்களின் விலை ரூ.550 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.83,410 மற்றும் ரூ.89,020 ஆக மாறியுள்ளன. மேலும், ஸ்பிளிட்-சீட் மற்றும் iGO வேரியன்ட்களின் விலையும் ரூ.1,320 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்டார்க் 125 வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

மற்ற மாடல்களின் விலைகள் உயர்த்தப்பட்ட போதிலும், தனது ஸ்போர்ட்டி ஸ்கூட்டரான டிவிஎஸ் என்டார்க் 125 (TVS Ntorq 125) மாடலைச் சந்தையில் மேலும் போட்டியிடச் செய்யும் வகையில் அதன் விலையைக் குறைத்து டிவிஎஸ் நிறுவனம் அசத்தியுள்ளது. அதன்படி, என்டார்க் 125 டிஸ்க் (Disc) மற்றும் டாப்-ஸ்பெக் XT ஆகிய இரண்டு வேரியன்ட்களின் விலையும் தலா ரூ.1,650 வரை flat ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இதன் டிஸ்க் வேரியன்ட் புதிய விலையாக ரூ.83,350-க்கும், XT வேரியன்ட் ரூ.1,01,500-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.