டெல்லி : இந்தியாவில் 125cc பிரிவில் ஒரு புதிய ஸ்கூட்டரை வாங்க நினைக்கும் போது, பலருடைய சாய்ஸ் லிஸ்ட்டிலும் முதலில் இடம்பெறும் இரண்டு முக்கிய பெயர்கள் டிவிஎஸ் என்டார்க் 125 (TVS Ntorq 125) மற்றும் சுஸுகி அக்சஸ் 125 (Suzuki Access 125) ஆகும். சந்தையில் இந்த இரண்டு வாகனங்களுமே தங்களின் இடத்தை வலுவாகப் பிடித்துள்ளன. ஆனால், இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட இருவேறு ரைடர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
என்டார்க் 125 ஸ்கூட்டரானது முழுக்க முழுக்க ஸ்போர்ட்டியான லுக், அசுர வேகம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது. அதே நேரத்தில், அக்சஸ் 125 ஸ்கூட்டரானது மென்மையான இன்ஜின், சிறந்த சவாரி சொகுசு, குறைந்த எடை மற்றும் தினசரி குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களில் உங்களுடைய அன்றாடத் தேவைகளுக்கு எது மிகச் சரியாகப் பொருந்தும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
வடிவமைப்பு மற்றும் தோற்றம்
டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரானது முற்றிலும் ஒரு ஸ்போர்ட்டியான கேரக்டருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஷார்ப்பான பாடி பேனல்கள், ஆக்ரோஷமான முன்பக்க டிசைன் மற்றும் மஸ்குலர் தோற்றம் ஆகியவை இதற்கு ஒரு பக்கா ரேசிங் பைக் போன்ற எனர்ஜெடிக் லுக்கைத் தருகின்றன. இதன் காரணமாகவே கல்லூரி இளைஞர்கள் மத்தியில் என்டார்க் 125 மிகவும் பாப்புலராக வலம் வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களைக் கவர இதில் பல ரேஸ் எடிஷன் வேரியண்ட்களையும் டிவிஎஸ் நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
சுஸுகி அக்சஸ் 125 முற்றிலும் மாறுபட்ட ஒரு எளிய, நேர்த்தியான மற்றும் பிரீமியம் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் டிசைன் மிகவும் மெச்சூர்டாகவும், காலத்தால் அழியாத கிளாசிக் ஸ்டைலிலும் இருப்பதால், இதை கல்லூரி மாணவர்கள் முதல் அலுவலகம் செல்வோர் மற்றும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை யார் ஓட்டினாலும் கச்சிதமாகப் பொருந்தும். உங்களுக்குச் சாலைகளில் தனித்துத் தெரியக்கூடிய ஸ்போர்ட்டி லுக் வேண்டுமென்றால் என்டார்க் சிறந்த சாய்ஸ், அதே சமயம் அணைத்து வயதினருக்கும் செட் ஆகக்கூடிய எளிய வடிவமைப்பு வேண்டுமென்றால் அக்சஸ் சிறந்த தேர்வாகும்.
இன்ஜின்
இன்ஜின் பிரிவைப் பொறுத்தவரை, இரண்டுமே 125cc பிரிவைச் சேர்ந்தவை என்றாலும் இவற்றின் பவர் டெலிவரி முற்றிலும் வேறானது. டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.8cc, த்ரி-வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்டான ரேஸ் எக்ஸ்பி (Race XP) மாடலானது அதிகபட்சமாக 10.2 PS பவரையும் மற்றும் 11.5 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் அசுர திறன் கொண்டது. இது வெறும் 7.9 வினாடிகளில் 0-60 கி.மீ வேகத்தைத் தொட்டுவிடும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 98 கிலோமீட்டர் ஆகும். சிக்னலில் இருந்து வண்டியை உடனே பிக்-அப் செய்ய நினைப்பவர்களுக்கும், வேகத்தை விரும்புபவர்களுக்கும் என்டார்க் ஒரு செம்ம மாஸ் அனுபவத்தைத் தரும்.
சுஸுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரில் 124cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 10.2 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது அதிரடி வேகத்திற்கு முக்கியத்துவம் தராமல், நகர டிராஃபிக்கில் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் மிகவும் ஸ்மூத்தாகவும், அமைதியாகவும் லீனியர் முறையில் இயங்கும் படி டியூன் செய்யப்பட்டுள்ளது. டிராஃபிக் நெரிசலில் வண்டியை மிகவும் நிதானமாகக் கையாண்டு ஓட்ட நினைப்பவர்களுக்கு அக்சஸ் இன்ஜின் ஒரு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கும்.
மைலேஜ் விவரங்கள்
தினசரி வண்டியைப் பயன்படுத்துபவர்களுக்குப் பெட்ரோல் சிக்கனம் தான் மிக முக்கியமான காரணியாகும். மைலேஜ் என்று வந்துவிட்டால், சுஸுகி அக்சஸ் 125 பைக் மிகத் தெளிவான முன்னிலையில் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சுஸுகி ஈகோ பெர்ஃபார்மன்ஸ் (SEP) தொழில்நுட்பம் இன்ஜின் ஸ்மூத்னஸை கெடுக்காமல் பெட்ரோல் நுகர்வை மிகக் கச்சிதமாகக் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக, அக்சஸ் 125 ஸ்கூட்டர் சாதாரண நகர டிராஃபிக் சாலைகளிலேயே மிக எளிதாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 50 முதல் 55 கி.மீ வரை சிறந்த மைலேஜை வாரி வழங்குகிறது.
மறுபுறம், டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் நல்ல மைலேஜ் தந்தாலும், இதன் அதிகப்படியான இன்ஜின் பவர் மற்றும் ஸ்போர்ட்டி கேரக்டர் காரணமாக, பெட்ரோல் சிக்கனத்தை விடவும் வேகத்திற்கே இது முன்னுரிமை தருகிறது. நீங்கள் வண்டியை மிகவும் நிதானமாக ஓட்டினால் ஒரு லிட்டருக்கு சுமார் 40 முதல் 45 கி.மீ வரை மைலேஜ் பெற முடியும். எனவே, பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தி காசை சேமிப்பது தான் உங்களின் முதல் குறிக்கோள் என்றால் சுஸுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரே உங்களின் சிறந்த லாபகரமான சாய்ஸ் ஆகும்.
சொகுசு மற்றும் குடும்பப் பயன்பாடு
சவாரி சொகுசு மற்றும் குடும்பப் பயன்பாட்டில் சுஸுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டைக் கொண்டுள்ளது. இதில் 856 மி.மீ நீளமுள்ள ஒரு மிகப்பெரிய அகலமான இருக்கை (Long Seat) கொடுக்கப்பட்டுள்ளது, இது பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும், பெண்களுக்கும் மிகச் சிறந்த சொகுசைத் தரும். மேலும் இதன் ஒட்டுமொத்த எடை வெறும் 106 கிலோ மட்டுமே என்பதால், வண்டியை பார்க்கிங் பகுதிகளில் திருப்புவதும் கையாளுவதும் மிகவும் எளிது. வீட்டில் இருக்கும் பல குடும்ப உறுப்பினர்கள் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதற்கு இதுவே மிகச் சிறந்த சொகுசான வாகனமாகும்.
டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரும் நல்ல ஓட்டுதல் சொகுசைத் தந்தாலும், இதன் சஸ்பென்ஷன் அமைப்பு சற்றே கடினமாக (Stiff Suspension) இருக்கும். வளைவுகளில் வண்டியை வேகமாகத் திருப்பும்போது அதிக ஸ்டெபிலிட்டி கிடைக்க இது உதவினாலும், மோசமான மேடு பள்ளங்களில் செல்லும்போது அக்சஸ் அளவுக்குச் சொகுசாக இருக்காது. மேலும் இதன் எடை 118 கிலோவாகச் சற்று கூடுதலாக இருப்பதால், அக்சஸ் ஸ்கூட்டரை விடக் கையாளுவதற்குச் சற்று கூடுதல் கவனம் தேவைப்படும்.
ஸ்டோரேஜ்
தினசரி காய்கறி வாங்குவது, ஹெல்மெட் வைப்பது போன்ற நடைமுறைப் பயன்பாடுகளுக்கு டிக்ஸி ஸ்டோரேஜ் மிகவும் அவசியமாகும். சுஸுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரில் 24.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய அண்டர்-சீட் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதில் ஒரு முழு அளவிலான ஃபுல்-பேஸ் ஹெல்மெட்டை மிக எளிதாக வைத்துப் பூட்ட முடியும். மேலும், காய்கறி பைகளை மாட்டுவதற்கான ஹூக்குகள் மற்றும் லேசான பாடி அமைப்பு ஆகியவை இதன் தினசரி பயன்பாட்டை மிகவும் எளிதாக்குகின்றன.
டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரிலும் சிறந்த ஸ்டோரேஜ் வசதி இருந்தாலும், இதன் டிக்ஸி கொள்ளளவு அக்சஸை விடச் சற்று குறைவாகவே இருக்கும். என்டார்க் ஸ்கூட்டர் அதிகப்படியான டிக்ஸி இடத்திற்காக வாங்கப்படுவதில்லை, மாறாக அதன் அசுரத்தனமான பெர்ஃபார்மன்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்காகவே மக்களால் வாங்கப்படுகிறது.
தொழில்நுட்ப அம்சங்கள்
தொழில்நுட்ப வசதிகளைப் பொறுத்தவரை, டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் இந்த செக்மென்ட்டிலேயே மிகவும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 'ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட்' (SmartXonnect) ப்ளூடூத் சிஸ்டம் மூலம் போனை இணைத்து, டர்ன்-பை-டர்ன் கூகுள் நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்டன்ஸ், பயணத்தின் போது வரும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட்கள், வண்டியை கடைசியாக நிறுத்திய இடம் போன்ற பல காஸ்ட்லி வசதிகளை ஸ்கிரீனிலேயே பார்த்துக்கொள்ளலாம். இதன் டாப் மாடல்களில் லேப் டைமர் மற்றும் பிரத்யேக ரைடிங் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் அக்சஸ் ஸ்கூட்டர் இந்த தொழில்நுட்பப் பந்தயத்தில் பின்தங்கியிருந்தாலும், தற்போதைய புதிய சுஸுகி அக்சஸ் 125 மாடல்களில் ரைட் கனெக்ட் (Ride Connect) ப்ளூடூத் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக அக்சஸ் ஸ்கூட்டரிலும் இப்போது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்புகள், மிஸ்டு கால் அலர்ட்டுகள் போன்ற அனைத்து நவீன ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதிகளும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன.
