டாஸ்மாக் ரெய்டுக்கு மத்தியில் பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.!
தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை முதலே தேனாம்பேட்டை, மணப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் நிறுவன முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த அதிரடி சோதனையானது நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடித்தி வருகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டான் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமரன், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஆகாஷ் பாஸ்கரன். 2 வாகனங்களில் வந்த 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை அல்லது வேறு விசாரணைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.