ஜனநாயகனுக்கு மீண்டும் ஒரு சிக்கல்?

அரசியல் கட்சி தலைவர் நடித்திருக்கும் படம் என்ற அடிப்படையில் மறு தணிக்கை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

jana nayagan postponed

சென்னை :நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்று விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்ந்து சிக்கலில் உள்ளது. சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரான இந்த பிரம்மாண்ட படைப்பு, தமிழக ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது.முதலில் 2026 ஜனவரி 9-ஆம் தேதி வெளியீடு திட்டமிடப்பட்டிருந்த இப்படம், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) ஆய்வுக் குழு சில காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு பரிந்துரை செய்ய மறுத்ததால் தாமதமானது. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் இரு நீதிமன்றங்களும் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு அளிக்கவில்லை.இதனால் படத்தின் OTT உரிமை ஒப்பந்தமும் பாதிக்கப்பட்டது. சமீபத்தில் அமேசான் ப்ரைம் உடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இந்த தாமதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாக்கியது.படத்தின் அரசியல் உள்ளடக்கம், சில சர்ச்சைக்குரிய வசனங்கள் மற்றும் காட்சிகள் காரணமாக தணிக்கை வாரியத்துக்கும் படக்குழுவுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் படம் மறுஆய்வுக் குழுவின் (Revising Committee) பார்வைக்கு அனுப்பப்பட்டது.கடந்த மார்ச் 9-ஆம் தேதி மறுஆய்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குழு உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்றைய ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 17 அன்று மறுஆய்வு குழு அதிகாரப்பூர்வமாக படத்தை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் மறுதணிக்கை குழு மும்பையில் படத்தை பார்த்த பிறகு புதிய பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது. படத்தில் அரசியல் கட்சி தலைவர் நடித்திருப்பதால், தேர்தல் ஆணைய அதிகாரிகளும் படத்தை பார்த்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.இதற்கு படக்குழுவினர் கடும் கேள்வி எழுப்பியுள்ளனர். “தேர்தலுக்கு பிறகே படம் வெளியாக உள்ள நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்ப்பதற்கு என்ன அவசியம்? தேர்தல் நடைபெறும் காலத்தில் படம் வெளியாகவில்லை என்பது தெளிவாக இருக்கும்போது இந்த பரிந்துரை ஏன்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த புதிய சிக்கல் காரணமாக தணிக்கை சான்று வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே படத்தின் வெளியீடு பல முறை தள்ளிப்போய் வரும் நிலையில், இந்த பிரச்னை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகனுக்கு மீண்டும் ஒரு சிக்கல்?