டெல்லி : யஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படமான ‘டாக்சிக்’ திரைப்படம், முன்பு அறிவிக்கப்பட்ட ஜூன் 4, 2026 என்ற வெளியீட்டுத் தேதியில் இருந்து மீண்டும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதனை, படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது“நாம் உருவாக்கும் படங்கள் பல உண்டு. ஆனால் சில படங்கள், நாம் சினிமாவை ஏன் காதலித்தோம் என்பதை நினைவூட்டும். ‘டாக்சிக்’ அப்படிப்பட்ட ஒரு பயணம். சினிமாகான் மேடையில் இப்படத்தை வெளியிட்டபோது, உலக அளவில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு, இந்தப் படம் உலக அளவில் அதன் முழு திறனுடன் சென்றடைய வேண்டும் என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. தற்போது உலக அளவிலான விநியோகம் மற்றும் பார்ட்னர்ஷிப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். இதன் காரணமாக, ஜூன் 4ஆம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்ட தேதியில் படத்தை வெளியிடாமல், உலக அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளோம். ‘டாக்சிக்’ விரைவில் உலக அரங்கங்களில் வெளியாகும்.
இந்திய சினிமா உலக அரங்கில் தனது குரலை உயர்த்தி வரும் இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு நபருக்கும் பொறுப்பு உள்ளது. ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இந்திய சினிமாவுக்கும், அனைவருக்கும் என் பங்கைச் செய்யும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன். படத்தை உலக அளவில் அதன் உண்மையான தாக்கத்துடன் கொண்டு செல்ல தேவையான நேரத்தை எடுத்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு மாற்றத்திலும் உங்கள் ஆதரவு என்னுடன் இருந்துள்ளது. அதை நான் ஆழ்ந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். சில கதைகள் பொறுமையைக் கோருகின்றன. சில பயணங்கள் அதைத் தேவையாக்குகின்றன. நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த படத்தை, கொண்டாட்டத்தை, இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படத்தை வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம்.”இந்த அறிவிப்பு, ‘டாக்சிக்’ படத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், உலக அளவிலான விநியோகம் மற்றும் பார்ட்னர்ஷிப் பணிகளை முழுமையாக ஒருங்கிணைக்கும் நோக்கில் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
