அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட்…ரஜினி உடல்நிலை எப்படி இருக்கு?
நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு அவரது உடல்நலம் சீராக உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்ட காரணத்தால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திடீரென மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட தகவலைப் பார்த்த ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல்நிலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் ரசிகர்களுக்கு ஆறுதலான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு தகவல் கொடுத்து இருந்தார்.
அதனைத்தொடர்ந்து, ரஜினியின் உடல்நிலை குறித்த தற்போதைய நிலை பற்றிய தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது, சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்த நிலையில், அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, அடி வயிற்றுக்கு அருகில் அவருக்கு ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் சற்று நேரத்தில் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன் அடுத்த 2-3 நாட்களுக்கு மருத்துவமனையில் குணமடைவார் எனவும் மருத்துவர்கள் தரப்பிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஜினியின் உடல்நிலையை இதயம் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் மருத்துவர் சாய், மருத்துவர் பாலாஜி மற்றும் மருத்துவர் விஜய் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். எனவே, விரைவில் ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.