ஆண் குழந்தை வளர்ப்பு – ஒரு மனிதன் நல்லவராவதும் தீயவராவதும் அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பதில் தான் உள்ளது. நாம் பெண் குழந்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பதில்லை. இந்த பதிவில் ஆண் பிள்ளைகளுக்கு கட்டாயம் கற்றுத் தரக்கூடிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
சமீப காலமாக எங்கு பார்த்தாலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொலை போன்ற செய்திகள் தான் நம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆண் குழந்தைகளுக்கு கூட இந்த நிலை ஏற்படுகிறது. இது ஏன் நடக்கிறது இந்த தவறுகள் எல்லாம் எங்கிருந்து தொடங்குகிறது என்று நாம் யோசிக்க வேண்டும். ஒரு ஆண் பிள்ளை குழந்தையாக இருக்கும் பொழுது இருந்தே நாம் சில விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆண் குழந்தை வளர்ப்பு :
பெண் குழந்தைகளிடம் காட்டும் கவனிப்பை ஆண் பிள்ளைகளுக்கு காட்டுவதில்லை, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறுவோம். ஆனால் ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில்லை.
ஆண் குழந்தை சிறு வயதாக இருக்கும்போதே ஆண் பெண் இருவருமே சமம் என்றும் அவர்களுக்கு வீட்டில் உள்ள வேலைகளை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சமமாக செய்ய சொல்லி கற்றுக் கொடுக்கவும்.
பெண் என்றால் சமையல் வேலை செய்யத்தான் என்ற மனப்பான்மையை மாற்றி இந்த வேலையை ஆண் பிள்ளைகளும் செய்ய வேண்டும் இன்று அவர்களுக்கு கூற வேண்டும்.சக பெண் பிள்ளைகளை அக்கா தங்கை என்று உறவுமுறை கூறி சொல்லி வளர்க்கவும். சிறுவயதிலேயே பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆண் பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தை தெரிந்து கொள்ளுங்கள். எப்போதுமே அவர்கள் மீது ஒரு கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.ஆண் பிள்ளைகளிடம் கேள்விகள் கேட்க வேண்டும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதெல்லாம் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக எப்போதுமே அவர்களை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கக் கூடாது ஒரு சில நேரங்களில் அது பொய் சொல்ல கற்றுக் கொடுத்து விடும். ஆனால் அவர்களை நாம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் சிறு தவறு செய்தால் கூட அதை நாம் லேசாக எடுத்துக் கொள்ளாமல் உடனே கண்டிக்க வேண்டும் அதற்கு ஒருபோதும் துணை போகக்கூடாது.
ஒழுக்கம் மிக அவசியமானது ஒரு குழந்தை தன் வாழ்க்கை பாதையை கொண்டு செல்ல தண்டவாளமாக இருப்பது அவர்களின் ஒழுக்கம், கல்வி ,பெற்றோர்களின் வளர்ப்பு. இதை சரியாக அந்த குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
நல்ல குழந்தைகள் தான் நம் நாட்டின் நல்ல மனிதர்களாக மாறுவார்கள். குழந்தையை வளர்ப்பதில் தவறினால் அவர்களின் வாழ்க்கை தவறி விடும் என்பதை நம் மனதில் வைத்துக் கொண்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
