தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பொறியாளர்கள் உட்பட 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா அருகே கட்டுமானத்தில் உள்ள SLBC சுரங்கப்பாதையின் 3.மீ அளவுள்ள கூரைப் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சுரங்க வேலை ஆரம்பித்த 4 நாட்களிலியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 2 பொறியாளர்கள் உட்பட மொத்தம் 8 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளனர். இதில் சிக்கிய அனைவருமே மாற்று மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் குமார், ஸ்ரீனிவாஸ் எனும் பொறியாளர்கள், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் சாஹு, ஜடக்ஸ் , சந்தோஷ் சாஹு, அனுஜ் சாஹு, ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த சன்னி சிங், பஞ்சாபைச் சேர்ந்த குர்பிரீத் சிங் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
இவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் உள்ளூர் தீயணைப்பு வீர்ர்கள், மீட்புப்படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில், தற்போது இந்திய ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) என பலரும் மீட்புப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாநில அமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி மற்றும் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் ஆகியோர் மீட்புப்பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா கூறுகையில், “உண்மையைச் சொல்லப் வேண்டுமென்றால், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. ஏனென்றால், நான் சுரங்கப்பாதை எப்படி இருக்கிறது என விபத்து நடந்த இடத்தை கடைசி வரை சென்று பார்த்தேன். அது கிட்டத்தட்ட 50 மீட்டர் தொலைவில், 9 மீட்டர் விட்டத்தில், கிட்டத்தட்ட 30 அடி ஆழத்தில் உள்ளது. அந்த 30 அடியில், 25 அடி வரை சேறு குவிந்துள்ளது,” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இருந்தும் மீட்புப்பணிகள் தொடர்க்கின்ற்ன, மீட்பு பணியின் போது ஒருவரின் கை மட்டும் தென் பட்டதாக தெலுங்கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.