திமுக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள்! பதிலடி கொடுத்த தர்மேந்திர பிரதான்!
பாஜக ஆளாத மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.

டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், தமிழகத்தை ஆளும் திமுக கட்சி இது இந்தி திணிப்பு என கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். இன்னும் இந்த விவகாரம் முடிவு பெறாமல் இருக்கும் சூழலில், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவுள்ளது.
இந்த சூழலில், இன்று டெல்லி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது. அப்போது திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் தமிழகத்திக்கு நீதி வேண்டும் என பேசி மும்மொழி விவகாரம் குறித்து கேள்விகளையும் எழுப்பினார்கள்.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், ” புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கூட தராமல் வஞ்சிக்கிறது. பழிவாங்கும் கருவியாக அதை பயன்படுத்துவது சரியா?
மத்திய அரசின் இந்த கொள்கையை ஏற்காததற்காக மாநில அரசுக்கு நிதியை மறுக்கக் கூடாது மாநில அரசுக்கு நீதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை ஒன்றிய அரசு வீணாக்குகிறது” எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தர்மேந்திர பிரதான் ” திமுக தமிழகத்தில் நேர்மையில்லாமல் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். அவர்களின் ஒரே வேலை மொழித் தடைகளை உருவாக்குவது தான். மொழி என்ற இந்த ஒரு விஷயத்தை வைத்து அவர்கள் தொடர்ச்சியாக அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
பாஜக ஆளும் இடங்கள் மட்டுமில்லை, பாஜக ஆட்சி இல்லாத மற்ற இடங்களில் கூட தேசிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாமல் நாங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குவதாக அவர்கள் குற்றம்சாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு முன்னதாகவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்திற்கு தாங்கள் தயாராக இருப்பதாக கூறினார். அதைப்போல இப்போது என்னிடம் கேள்வி எழுப்பிய எம்பி மற்றும் தமிழ்நாடு கல்வி அமைச்சர் என்னை சந்திக்க வந்து அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.இப்போது தேவையில்லாமல் பேசி பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்” எனவும் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.