தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய விமானங்களின் சேதம் குறித்த தகவல்களை வழங்க இயலாது என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கினார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸின் ராஜீவ் சுக்லா மற்றும் தீபேந்திர ஹூடா, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) அபராஜிதா சாரங்கி மற்றும் அருண் கோவில் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் மிஸ்ரி, “இந்தியாவும் பாகிஸ்தானும் மே 10 அன்று இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டன. பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மேலும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்தியா போர் நிறுத்தத்திற்கு காரணம் அமெரிக்கா தான் என்று டிரம்ப் குறைந்தது ஏழு முறையாவது கூறியிருந்தார். இதற்கு இந்தியா ஏன் அமைதியாக இருந்தது? என்று குழுவில் இருந்த ஒருவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மிஸ்ரி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், அவரிடம் பாகிஸ்தான் மீதான தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை வழங்க இயலாது’ என வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிதாக தகவல் வெளியாகியுள்ளது.