குடியரசு தலைவரை நாளை சந்திக்கிறது இந்தியா கூட்டணி!

கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. மணிப்பூர் வன்முறையில் 100க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நிவாரண முகாம் தங்கவைக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறைக்கு மத்தியில் மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாக்கி மேலும், பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். இந்த நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவரை இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குழு நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் விவகாரம் பற்றி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து இந்தியா கூட்டணி முறையிடுகிறது. இந்த சந்திப்பில், மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சி 21 எம்.பி.க்களும் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.