ஜம்மு & காஷ்மீர எல்லையில் பதற்றம்..பாகிஸ்தான் மீறலுக்கு கடும் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே கடும் தாக்குதல் நடைபெற்றது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ceasefire in J&K

ஜம்மு : ஜம்மு & காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறல்களுக்கு முயற்சித்துள்ளது. இதை எதிர்த்து இந்திய இராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து, எதிரி தரப்பில் “பெரும் உயிரிழப்புகள்” ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வீரர்கள் வீரமரணம்

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி, ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LOC) அருகே, பயங்கரவாதிகள் முன்கூட்டியே திட்டமிட்ட IED (Improvised Explosive Device) வெடிப்பில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். இதில் ஒருவர் கேப்டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் படைகள் கிருஷ்ணா காட்டி பகுதியில் திடீரென போர் நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது தான் இந்தியா ராணுவம் பதிலடி கொடுக்க ஒரு காரணமாகவும் அமைந்தது.

கண்ணிவெடி 

இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளுக்கு இடையிலான இரவில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி பகுதியில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள், பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அதன்பின் பிப்ரவரி 8ஆம் தேதி, ராஜோரி மாவட்டத்தின் கெரி செக்டரில், பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்கள் ஊடுருவ முயற்சிக்க ஒரு வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த மோதல் எங்கே நடந்தது?

இந்த மோதல் முக்கியமாக ராஜோரி மற்றும் பூஞ்ச் எல்லைப்பகுதியில் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் படைகள் தங்கள் நிலைகளை வலுப்படுத்தும் முயற்சியில் துப்பாக்கிச் சூடு தொடங்கியதாக பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் படையினருக்கு பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளிவராதபோதும், அவர்கள் முன்னணி முகாம்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் இந்திய இராணுவ தாக்குதலில் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

இந்திய ராணுவம் சொன்னது என்ன? 

இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு துறையின் அதிகாரிகள் தெரிவித்ததாவது”எல்லையில் அமைதியை பாகிஸ்தான் தொடர்ந்து உடைப்பதால், இந்திய இராணுவம் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டிய நிலை வந்துள்ளது. இதுபோன்ற அத்துமீறல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை போட்டிருந்த நிலையில், எல்லைப் பகுதியில் அத்துமீறல், தாக்குதல்கள் குறைந்திருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் அதனை மீறி தாக்குதல் நடத்தியதும், அதற்கு இந்தியா தற்போது பதிலடி கொடுத்ததும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்