கேரளா : பள்ளி ஆண்டு விடுமுறையை ஜூன் – ஜூலைக்கு மற்ற அரசு திட்டம்?
கேரளாவில் பள்ளிக்கான ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதத்திலிருந்து, மழைக்காலமான ஜூன்-ஜூலைக்கு மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளா : கேரள அரசு, பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மழைக்காலமான ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது. கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி, இந்த மாற்றத்திற்கு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் வகையில் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஏப்ரல்-மே மாதங்களில் கடும் வெப்பம் காரணமாக மாணவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாகவும், ஜூன்-ஜூலை மாதங்களில் கனமழை காரணமாக பள்ளிகள் அடிக்கடி மூடப்படுவதால் பாடங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை அரசு எதிர்பார்க்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன்-ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்படுவதால், பள்ளிகள் அவ்வப்போது மூடப்படுகின்றன. இதனால், கல்வி ஆண்டில் தேவையான 1,100 மணி நேர கற்பித்தல் மணிநேரங்களை பூர்த்தி செய்வது சவாலாக உள்ளது. ஜூன்-ஜூலையில் விடுமுறை அளித்தால், மழை காரணமாக ஏற்படும் கல்வி இடையூறுகளை குறைக்க முடியும் என்று அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
எனவே, மே-ஜூன் மாதங்களுக்கு விடுமுறையை மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த மாற்றம், கேரளாவின் கல்வி அட்டவணையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு மாநிலத்திற்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு விதிமுறை மாற்றங்கள் தேவைப்படும். மாவட்ட ஆட்சியர்கள், கனமழை நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதால், கல்வி நாட்கள் இழக்கப்படுவதாகவும், இது மாணவர்களின் கற்றல் தொடர்ச்சியை பாதிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், மழைக்காலத்தில் மாணவர்கள் மழை தொடர்பான நோய்களுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளதாகவும், பெற்றோர்கள் பள்ளி செல்லும் மாணவர்களை அழைத்துச் செல்வதில் சிரமம் அடைவதாகவும் அவர் கூறினார்.மாற்றத்தை செயல்படுத்துவதற்கு முன், பொதுமக்கள், கல்வி நிபுணர்கள், மற்றும் அரசு அமைப்புகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பேஸ்புக் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் தெரிவிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.