மணிப்பூர், பிரதமர் பேசக்கூடாத வார்த்தைகளா… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கேள்வி.!

நாடாளுமன்ற மாநிலங்களவையின் கூட்டத்தில் மணிப்பூர், பிரதமர் என்ற வார்த்தைகளை ஏன் நீக்கியுள்ளீர்கள் என எதிர்க்கட்சியினர் கேள்வி.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, தொடங்கிய முதல் நாளிலேயே முடங்கியது, இன்று மீண்டும் தொடங்கிய நிலையில் பிரதமர் மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் பேச வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.
நேற்று மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்தும் பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் அமளி நடைபெற்றதால், அவைக்குறிப்பிலிருந்து பிரதமர், மணிப்பூர் என்ற இரு வார்த்தைகளும் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாநிலங்களவையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன், இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலங்களவை கூட்டம் தொடங்கியதும், மணிப்பூர், பிரதமர் என்ற வார்த்தைகளை அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன், இவை இரண்டும் பேசக்கூடாத வார்த்தைகளா என கேள்வியெழுப்பியுள்ளார். மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.