”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், தீவிரவாதிகளின் மறைவிடங்களை அழித்து, இந்தியா, பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்திருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், தி.மலை, போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குழித்துறை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்பட்டன. இதனை பிரதமர் மோடிராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இந்த ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பொதுமக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசுவோம்.
ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் இனி நம்மிடமிருந்து தகுந்த பதிலடி இருக்கும். அணுகுண்டு அச்சுறுத்தல்களுக்கு இந்தியா இனி ஒருபோதும் பயப்படாது. பாகிஸ்தானின் அரசு அதிகாரிகளையும், அந்நாட்டை சேர்ந்த நடிகர்களை இனி இந்தியா ஒன்றாகவே கருதும்.
பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம், 3 படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாகிஸ்தானை மண்டியிட வைத்தோம். என்னுடைய எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும் ஆனால், தற்போது என் ரத்தம் கொதிக்கிறது. என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது.
மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் பெறாது, இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார்.