“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
இந்தியா நடத்திய தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானை எட்டியுள்ளதாக முற்றிலும் அபத்தமான குற்றச்சாட்டு மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது என விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்கள்.
இது தொடர்பாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ”பொதுமக்கள் இந்திய அரசாங்கத்தை விமர்சிப்பதை கண்டு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைவதை நாங்கள் கண்டோம்.
நாட்டின் குடிமக்கள் அரசு மீது விமர்சனங்கள் வைப்பது பாகிஸ்தானுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏனென்றால் இது ஜனநாயகத்தின் அடையாளமாகும். பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு மக்களே தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வதந்தி பரப்பி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மீது பல முறை தாக்குதல் நடத்தியது எந்த நாடு? என்பதை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு இந்தியாவை சீண்டுகிறது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்தியா அளவோடு பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வதந்தி பரப்புகிறது. இந்தியாவின் மின் கட்டமைப்புகள், சைபர் பாதுகாப்பு வசதிகளை சேதப்படுத்திவிட்டதாக பாகிஸ்தான் பொய் சொல்கிறது. ஆப்கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலும் உண்மைக்குப் புறம்பானது.
மேலும், எஸ் 400 பாதுகாப்பு அமைப்புக்கு எந்த சேதமும் இல்லை. பாகிஸ்தான் பரப்பும் தவறான தகவலை நம்ப வேண்டாம். இந்திய ஏவுகணை ஆப்கானிஸ்தானை தாக்கியதாக பாகிஸ்தான் கூறியதும் வதந்தி என்று விளக்கம் கொடுத்துள்ளார்.