"கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்" – இளையராஜா.!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இளையராஜாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ilaiyaraaja - india pakistan war

சென்னை :இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நான்காவது நாளாக இன்றும் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தன்னுடைய இசைக் கச்சேரி வருவாய் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக இசையமைப்பாளரும் எம்.பி.யுமான இளையராஜா அறிவித்துள்ளார்.

தாயகத்தின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமையாக கருதுவதாக இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், ”இப்போது நிஜத்தில் வீரம் கொண்ட நம் ஹீரோக்கள், பஹல்காமில் நடந்த தாக்குதலை எதிர்கொள்ள எல்லைகளில் துணிச்சல், துல்லியம் மற்றும் உறுதியுடன் செயல்படுகின்றனர்.

இதை அறியாமலேயே இந்த வருட தொடக்கத்தில், நான் என் முதல் சிம்பொனியை இசையமைத்து அதற்கு ‘வேலியண்ட்’ (வீரம் மிக்க) என்று பெயரிட்டேன். இத்தருணத்தில் பெருமைமிக்க இந்தியனாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் நான் என் இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகையையும், ஒரு மாத ஊதியத்தையும், தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்.

தீவிரவாதத்தை அழிக்கவும், எல்லையோர மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நம் ‘வீரம் மிக்க’ ராணுவ வீரர்களின் மாபெரும் முயற்சிக்காக இதை செய்கிறேன். ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node