துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களில் 2 பேரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு பிடித்துள்ளனர்.

பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் உள்ள பிரபல நகை கடையில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி காட்டி பணியாளர்களை மிரட்டி கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரபல தனியார் நகைக்கடை கோபாலி சௌக் கிளையில் இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கிகளுடன் ஒரு கொள்ளை கும்பல் புகுந்துள்ளது. அந்த கொள்ளை கும்பல் துப்பாக்கிகளை காட்டி நகைக்கடை ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களை மிரட்டி அங்கிருந்த தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அர்ரா பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இக்கொள்ளை சம்பவம் குறித்து நகைக்கடை கிளை மேலாளர் குமார் மிருத்யுஞ்சய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கொள்ளையர்கள் தங்கச் நகைகள், செயின்கள், தங்க வளையல்கள் மட்டுமின்றி சில வைர நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும்.
கொள்ளையடிக்கப்பட்ட நேரம் காலை நேரம். மாலை நேரமோ, இரவு நேரமோ அல்ல. நாங்கள் காவல்துறைக்கு போன் செய்தோம். ஆனால் அந்த சமயம் எங்களுக்கு போதிய உதவியோ, சரியான பதிலோ கிடைக்கவில்லை. இந்தத் கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையர்கள் தாக்கியதில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். கொள்ளையர்கள் ஊழியர்கள் தலையில் துப்பாக்கிகளால் தாக்கப்பட்டனர் என்றும், இந்த கொள்ளையில் குறைந்தது 8 கொள்ளையர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். அரா – பாபுராவிலிருந்து டோரிகஞ்ச் நோக்கி மூன்று மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும்படியான ஆறு நபர்கள் செல்வதை போலீசார் கண்டனர். அவர்களை சிறிது தூரம் துரத்தி சென்ற போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனை அடுத்து, போலீஸ்காரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரண்டு கொள்ளையர்களின் கால்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. துப்பாக்கி குண்டுகள் காயத்துடன் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், கொள்ளையடிக்கப்பட்ட குறிப்பிட்ட நகைகள், மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதுடன், இரண்டு கைத்துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என போஜ்பூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.