இது மோசமான விபத்து.! முதலில் மீட்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி.!

ஒடிசா ரயில் விபத்து மோசமான விபத்து எனவும், முதலில் மீட்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விபத்தில் சிக்கிய பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் நேரடியாக சென்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விபத்து குறித்த காரணங்கள், மீட்பு பணிகள் குறித்து ஆராய்ந்தார்.அதன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மத்திய அமைச்சர், ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும், மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன எனவும், இது மிகவும் மோசமான விபத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது மீட்பு பணிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், விபத்து குறித்த காரணங்களை ஆராய விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள், மத்திய மாநில அரசுகள் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மாநில காவல், ரயில்வே காவல்துறை அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் என பலரும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.