விவசாயிகள் 21 வது நாளாக போராட்டம் – மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்

டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கில் , மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.
டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், பலன் ஏதும் கிட்டவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இதனிடையே டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ,அதிக அளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்றும் விசாயிகள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றிக்கு இடையூறு விளைவிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என்றும் இதனை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கில் விவசாய சங்கங்கள் எதிர்மனுதாரர்களாக இணைய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும் இந்த வழக்கில் , மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.மத்திய அரசுடன் ஹரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.