டெல்லி : நீட்-யுஜி 2026 மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு விதித்திருந்த தற்காலிக தடையை நீக்க மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஜூன் 22ஆம் தேதி வரை டெலிகிராம் மீதான தடை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேஜஸ் காரியா, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின் கீழ் அவசர சூழ்நிலைகளில் இணைய தளங்கள் மற்றும் செயலிகளின் அணுகலை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார். மேலும், நீட் தேர்வின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நியாயமானதும், தேவையானதும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
விசாரணையின்போது டெலிகிராம் தரப்பு, நீட் தேர்வு தொடர்பான சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்குவதற்காக 900-க்கும் மேற்பட்ட இணைப்புகளை அகற்றியுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி கண்காணிப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தது.
ஆனால் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சட்ட அதிகாரிகள், டெலிகிராமின் தொழில்நுட்ப அமைப்பு மூலம் தானியங்கி 'பாட்' கணக்குகளை உருவாக்கி மிக வேகமாக தகவல்களை பரப்ப முடியும் என்றும், ஒரு கணக்கை முடக்கியாலும் அதே தகவல் மற்றொரு கணக்கின் மூலம் மீண்டும் பரவக்கூடிய சூழல் இருப்பதாகவும் வாதிட்டனர்.
இதனை பரிசீலித்த நீதிமன்றம், தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை அளவுக்கு மீறியதல்ல என்றும், தற்போதைய சூழலில் அது அவசியமான பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்படலாம் என்றும் தெரிவித்தது.
இந்த தீர்ப்பின் மூலம், ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் மீதான தடை தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், "சிலரின் தவறுக்காக இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்ட டெலிகிராம் பயனர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
