கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்கவையில் டெல்லி நிர்வாக மசோதா.. ஆதரவு 131.. எதிர்ப்பு 102.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற அலுவல் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. இந்த அமளி, அவை முடக்கதிற்கு இடையிலும் 20 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 12 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதில் 9 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஏற்கனவே டெல்லி நிர்வாக மசோதாவானது மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதேபோல நேற்று மாநிலங்களவையிலும் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா மீது நேற்று சுமார் 8 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. தற்போது உள்ள 237 மாநிலங்களவை உறுப்பினர்களில் 131 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 102 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநிலங்களவையிலும் டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
டெல்லி நிர்வாக மசோதாவானது, டெல்லி, மாநிலம் அல்லாத யூனியன் பிரதேசம் என்பதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மாநில அரசை விட மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உண்டு என்பதை குறிக்கும் வகையில் இந்த நிர்வாக மசோதாவானது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.