மக்களவையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம்… அனல்பறக்க காத்திருக்கும் அரசியல் விவாதம்.!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் மற்ற அலுவல் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து முழுமையான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் முழுமையான விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றம் அனுமதி தரவில்லை. மாறாக குறுகிய காலம் (அதிகபட்சம் 4 மணிநேரம்) விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் இரு பிரிவினர் இடையே வன்முறை ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு முகாம்களிடம் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு பல்வேறு பெண்களுக்கு பாலியல் ரீதியான வன்கொடுமைகளும் அரங்கேறி இருந்தன.
இந்த விவகாரங்களை முழு நீள விவாதமாக நடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி கூட்டணிகள் மக்களவையில் தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். மேலும் இன்று (ஆகஸ்ட் 8) நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) என மூன்று நாட்கள் இதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும், நாளை மறுநாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் எப்படியும் நிறைவேறாது. அதிக உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கே உண்டு. இருந்தும், அதன் மீது ஆளும் கட்சி சார்பில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்பது விதிமுறை என்ற நோக்கத்திற்காக தான் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், அவதூறு வழக்கில் தண்டனை பெற்று நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டதன் காரணமாக அவரது சஸ்பெண்ட் திரும்ப பெறப்பட்டது. இதனால் இன்று மக்களவையில் நடைபெறும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராகுல்காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.