ஒடிசா :மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரமேஷ் ஜெனா, சோஃபியா ஃபிர்தோஸ், தசரத் காமேங்கோ ஆகியோர் மீது காங்கிரஸ் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.ஒடிசாவில் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பிஜேடி, இடதுசாரி கட்சிகள் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தியிருந்தனர்.
ஆனால் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட ஹோட்டல் உரிமையாளர் திலீப் ரே வெற்றி பெற்றார். இந்தத் தோல்விக்கு காரணமாக 11 எம்.எல்.ஏ.க்கள் கட்சி விப்-ஐ மீறி வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் (ரமேஷ் ஜெனா, சோஃபியா ஃபிர்தோஸ், தசரத் காமேங்கோ) பாஜக ஆதரவு வேட்பாளருக்கு வாக்களித்ததாகக் கண்டறியப்பட்டது.
இதனால் காங்கிரஸ் கட்சி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஊடகங்களிடம் பேசியபோது, “இவர்கள் மூவரும் கட்சி விப்-ஐ மீறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். இது கட்சியின் மீதான துரோகம். அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணை (அதாவது கட்சி மாற்றுத் தடைச் சட்டம்) பிரிவின் கீழ் அவர்களை நிச்சயம் நீக்குவோம்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் ஒடிசாவில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சி விப்-ஐ மீறி வாக்களித்ததால், இவர்கள் மூவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளது.
