பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! நடந்தது என்ன?
டெல்லியில் பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்தித்து இரு நாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசியுள்ளனர்.

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். 4 நாள் பயணமாக தனது குடும்பத்தின் இந்தியா வந்திருக்கும் துணை அதிபர் ஜே.டி வான்ஸ் இந்தியா-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதும், வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புவிசார் அரசியல் முன்னுரிமைகளைப் பற்றி விவாதிக்க வருகை தந்திருக்கிறார். இந்த சந்திப்பு, டொனால்ட் ட்ரம்பின் குடியரசுத் தலைவர் பதவியேற்புக்குப் பின்னர் மோடியின் வாஷிங்டன் பயணத்தைத் தொடர்ந்து நடைபெற்றது.
இருவரும் சந்தித்து பேசிய நிலையில், இந்த சந்திப்பில் நடந்த விஷயங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. எனவே, சந்திப்பில் நடந்த விஷயங்களை பற்றி பார்ப்போம்.
வர்த்தக ஒப்பந்தத்தில் முன்னேற்றம்
ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரி விதிக்கும் கொள்கையை அறிவித்தது, இது இந்தியாவைப் பாதிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இந்த சந்திப்பில், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தம், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி, வரியை குறைக்க இந்திய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு
இரு நாடுகளும் பாதுகாப்பு, ஆற்றல் (எடுத்துக்காட்டாக, பசுமை ஆற்றல்), மற்றும் தொழில்நுட்பத்தில் (எடுத்துக்காட்டாக, செயற்கை நுண்ணறிவு) ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்தன. COMPACT என்ற புதிய திட்டத்தை தொடங்கினார்கள். இது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
மோடி மற்றும் வான்ஸி பேசியது?
மோடி: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வாழ்த்து சொல்லி, அவரை இந்தியாவுக்கு வரவேற்க ஆர்வமாக இருப்பதாக கூறினார். இந்தியா-அமெரிக்க உறவு மிக முக்கியமானது என்றார்.
வான்ஸ்: மோடியை “சிறந்த தலைவர்” என்று புகழ்ந்து, இந்தியாவின் விருந்தோம்பலுக்கு நன்றி சொன்னார். அமெரிக்கா இந்த உறவை வலுப்படுத்த விரும்புவதாக உறுதி அளித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு பேசிய பிறகு வான்ஸ் மற்றும் அவரது குடும்பம், டெல்லியில் ஸ்வாமிநாராயண் அக்ஷரதாம் கோயிலைப் பார்வையிட்டனர்.