Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?
இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் கைது செய்யப்பட்டதாக வெளியான போலி செய்தியை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும் தவறான தகவல்களை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இது பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் இந்திய விமானப்படை (IAF) விமானிகளில் ஒருவரான ஸ்க்வாட்ரான் லீடர் ஷிவாங்கி சிங்கின் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர், அவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டதாக பரவும் போலிச் செய்தகளை மத்திய அரசு சார்பில் உண்மை கண்டறியும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) விளக்கியுள்ளது.
மத்திய அரசு உண்மை சரிபார்ப்பு
தவறான தகவலை பரப்பிய அந்த நபரின் பதிவுக்கு சில நிமிடங்களுக்குப் பிறகு, பத்திரிகை தகவல் பணியகம் (PIB) அந்தக் தகவல்களை நிராகரித்து, அது “போலி” என்று கூறியிருக்கிறது. மேலும், “இது பாகிஸ்தான் சார்ந்த சமூக ஊடகங்கள், இந்திய பெண் விமானப்படை விமானி, ஸ்க்வாட்ரான் லீடர் ஷிவானி சிங், பாகிஸ்தானில் பிடிபட்டதாகக் கூறுவதைக் கையாளுகின்றன. இந்தக் கூற்று போலியானது” என்று விளக்கமளித்துள்ளது.
Indian Female Air Force pilot has NOT been captured🚨
Pro-Pakistan social media handles claim that an Indian Female Air Force pilot, Squadron Leader Shivani Singh, has been captured in Pakistan.#PIBFactCheck
❌ This claim is FAKE!#IndiaFightsPropaganda@MIB_India… pic.twitter.com/V8zovpSRYk
— PIB Fact Check (@PIBFactCheck) May 10, 2025
யார் இந்த ஷிவாங்கி சிங்?
உலகில் மிகவும் சக்திவாய்ந்த போர் விமானங்களில் ஒன்றான ரஃபேல் ஜெட் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குரியவர் தான் ஷிவாங்கி சிங். கடந்த 2020ஆம் ஆண்டு ரஃபேல் படையில் சேர்ந்த இவர் தற்போது அம்பாலா விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.
ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஷிவாங்கிக்கு இந்தியாவில் செயல்படுத்தப்பட இருக்கும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் தானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.