உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

Five members of the same family have committed suicide by drinking poison near Usilampatti in Madurai due to a debt problem.

மதுரை உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை உசிலம்பட்டி அருகே நாகப்பட்டறை ஒன்று வைத்து நடத்தி வருபவர் தான் சரவணன். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மனைவியுடனும் தனது மூன்று பிள்ளைகளுடனும் நாகப்பட்டறையில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார் சரவணன். இந்நிலையில் சில மாதங்களாக சரவணனுக்கு கடன் பிரச்சினை அதிகம் ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் சரவணன் மிகவும் திணறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலைமையை சமாளிக்க முடியாமல் தற்பொழுது விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரித்த பொழுது அவர்கள் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.