டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு..15 நாள்களில் 6 பேர் கைது..!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 6 பேர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் என ஏற்கனவே 51 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு கிடப்பில் கிடந்ததாக புகார் எழுந்ததால் 15 நாள்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய 99 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், ஒரே தேர்வு மையத்தில் எப்படி 99 பேர் தேர்ச்சி பெறமுடியும் என்ற சந்தேகம் எழுந்தநிலையில், இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்தப் புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி தேர்ச்சி பெற்ற 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவர தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.