ஒருநாளைக்கு 3 போட்டிகள்.. முதல் போட்டி சீனாவுடன்.. ஆசிய ஹாக்கி போட்டி சென்னையில் கோலாகல துவக்கம்….

இந்தியா, சீனா, பாகிஸ்தான் , ஜப்பான், மலேசியா, தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஆக்கி போட்டி இன்று (ஆகஸ்ட் 3) முதல் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி, 6 மணி மற்றும் இரவு 8:30 மணி என மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது.
முதல் போட்டியானது இந்தியா – சீனா இடையே இன்று நடைபெற உள்ளது. நாளை ஜப்பான் உடனும், வரும் 6ஆம் தேதி மலேசியா அணியுடனும், 7ஆம் தேதி கொரியா அணியுடனும், 9ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் விளையாட உள்ளது.
இந்த ஆசிய கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், ஆசிய கோப்பையையும் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பார்வையிட்டார். இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த போட்டியை காண்பதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசம் என்றும், உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார். ஆசிய கோப்பை நடப்புச் சாம்பியனாக தென் கொரியா உள்ளது குறிப்பிடத்தக்கது.