தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்பு டிஜிபி மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Hero Image

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் முக்கியமான நிர்வாக மாற்றங்களை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி.யாக டாக்டர் சந்தீப் மிட்டல் (IPS 1995) ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோல், தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் மாற்றப்படுகின்றனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேர்தல் தயார் நிலையை மறுபரிசீலனை செய்ததின் அடிப்படையில், டாக்டர் சந்தீப் மிட்டலை ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி.யாக நியமிக்க உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேற்கண்ட அதிகாரிகள் பணியில் சேர்ந்தது குறித்த அறிக்கையை ஏப்ரல் 8, 2026 மாலை 6 மணிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது: “மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை எந்தத் தேர்தல் சார்ந்த பொறுப்பிலும் நியமிக்கப்படக் கூடாது” என்று அறிவுறுத்தியுள்ளது.இந்தத் திடீர் நிர்வாக மாற்றங்கள், தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடுநிலையை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டு, புதிய அதிகாரிகள் மாலைக்குள் பணியில் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.