வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!
நாடு தழுவிய வேலைநிறுத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் திமுகவின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.
இதனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காமல் இருக்கலாம், இது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, நாளை (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் “No Work – No Pay” என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
வேலைநிறுத்தம் என்பது அரசு ஊழியர்களின் உரிமைகளில் ஒரு பகுதியாக இருந்தாலும், இது அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடைபெற வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நடத்தை விதிகள் (Tamil Nadu Government Servants Conduct Rules) மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின்படி, அனுமதிக்கப்படாத வேலைநிறுத்தங்களில் பங்கேற்பது ஒழுங்கீனமாகக் கருதப்படலாம்.
இதனால், நாளை (ஜூலை 09) நடக்கும் பொதுவேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால், ஊதியம் நிறுத்தப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.