விடியல் அரசே, இதனை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுக – எடப்பாடி பழனிசாமி

Default Image

தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வெளிப்படைத்தன்மையோடு செலுத்துக என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

திமுக அரசு முறையாக மக்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்காமல் விளையாட்டு காட்டுவதன் காரணம் புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியதாக செய்திகள் வந்தன. ஆனால், அவைகள் முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

கடந்த 13ம் தேதி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் எழுதுவதோடு நிற்காமல் பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்களில் பலர், இரண்டு மாதங்கள் கடந்த பின்பும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக பரிதவிக்கிறார்கள். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்து போட்டவர்கள் அதே மருந்தை போட வேண்டும் என்றும், இவை இரண்டும் பல தடுப்பூசி போடும் மையங்களில் இருப்பில் இல்லை எனவும் பொதுமக்கள் அலைகழிக்கப்படுகிறார்கள்.

எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து, கொரோனா தடுப்பு மருந்து விஷயத்தில், மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதைக் கைவிட்டு, மக்களைக் காப்பாற்றும் பணியில் இந்த அரசு ஈடுபட வேண்டும். மத்திய அரசால் தமிழகத்திற்கு கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது?.

இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட வேண்டும் என்பதையும், மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள் தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது பற்றியும், தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும், திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களை காப்பாத்துவதிலும், தடுப்பூசி செலுத்துவதிலும், பாதிப்புகள் மற்றும் இறப்புகளை தெரிவிப்பதில் அதிமுக அரசு வெளிப்படைத்தனமையுடன் செயல்பட்டது என்றும் தற்போது உள்ள திமுக அரசு தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வெளிப்படைத்தன்மையோடு செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்