கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் – டிஜிபி அறிவிப்பு.!
வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய சிபிசிஐடிக்கு மாற்றம் என டிஜிபி தெரிவித்துள்ளார்.

சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லை கே.டி.சி. நகர் பகுதியில் கடந்த ஜூலை 27-ம் தேதி அன்று பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை, காதல் விவகாரம் மற்றும் சாதி வேறுபாடு காரணமாக நிகழ்ந்த ஆணவக் கொலையாகக் கருதப்படுகிறது.
கவின், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் இந்தக் கொலையை அரங்கேற்றியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி, தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் உதவி ஆய்வாளர்களாக (SI) பணிபுரிபவர்கள், இந்தக் கொலையில் தூண்டுதல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு, நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், சுர்ஜித் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
கவினின் உறவினர்கள், சுர்ஜித்தின் பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி, கவினின் உடலைப் பெற மறுத்து மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன், சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்யவும், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும். சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு. குற்றப் புலனாய்வுத்துறை(CB.CID)க்கு மாற்றப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : அனைவரும் விடுதலை!
July 31, 2025