நெய்வேலி செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்!

Shankar Jiwal

தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்.

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று காலை என்எல்சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வந்தது. அப்போது, பாமகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸை விடுவிக்கக்கோரி பாமகவினர் அந்த பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், பாமகவினர் கற்கள் வீசியதால் காவலர்கள் சிலர் காயமடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்பின் என்எல்சி நுழைவு வாயிலில் நிலைமை கட்டுக்குள் வந்ததாகவும் கூறப்பட்டது.

வடக்கு மண்டல ஐஜி கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், நெய்வேலியில் பாமக போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு செல்ல உள்ளார். இதுதொடர்பாக டிஜிபி கூறுகையில், நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் வந்தது.

சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போலீசார் மீதும், போலீசார் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்,  3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என டிஜிபி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்