”உருட்டுகளும் திருட்டுகளும்” என்ற பெயரில் புதிய பிரசாரத்தை கையிலெடுத்த எடப்பாடி பழனிசாமி.!
உருட்டுகளும் திருட்டுகளும் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி புதிய பிரசார முன்னெடுப்பை தொடங்கிவைத்தார்.

சென்னை : வருகின்ற 2026 தேர்தலுக்காக திமுகவுக்கு எதிராக ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற புதிய பிரசார உத்தியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார். கடந்த தேர்தலில் திமுக அரசு அளித்த பொய் வாக்குறுதிகளை மையப்படுத்தி பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்த பிரசாரம் முதன்முதலாக புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே இன்று தொடங்கப்பட்டது. இது, அவர் மேற்கொண்ட மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம், ஆளும் திமுக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும், அவர்களின் ஆட்சியில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளையும் மக்களிடையே வீடு வீடாகச் சென்று வெளிப்படுத்துவதாகும். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கை முடிந்துவிட்டது. திமுகவில் தான் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கிறார்கள்.
திமுக ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை. நேர்மையானவர்களை திமுக அரசு சஸ்பெண்ட் செய்கிறது. தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திப்பதற்கான நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும், இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, திருச்செந்தூர், மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான பிரசார இலச்சினையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னதாக வெளியிட்டார்.
இந்த பிரசாரம், திமுகவின் ஆட்சியை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அதிமுகவின் முந்தைய ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டுவதற்கும் ஒரு முக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.