“பதவிக்காக கரப்பான் மாதிரி ஊர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி”…முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!!
பொய் சொல்லலாம் ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு பொய்க்கூடாது என்று விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்த பிறகு நடந்த விழாவில் பேசியுள்ளார்.

விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து வருவதாக விமர்சித்துக் கூறியிருந்தார். அது மட்டுமின்றி அந்த அறிக்கையில் “போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன.
மு.க. ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அந்த பணிகளை செய்யலாம். அத்தியாவசியமற்ற செலவுகளைச் செய்யவேண்டாம். சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது.உடனடியாக தேவையான நிதியினை அத்திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் ” எனவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, இன்று ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் திறந்து வைப்பதற்காக விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்த நிகழ்ச்சியில் ” எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் என விமர்சித்துப் பேசியுள்ளார்.
இது குறித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்” நமக்குப் பின்னாடி நம்மளை வெற்றிபெறவேண்டும் எனப் பலர் வந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நாம் இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்று தான் செயல்பட தோணுகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் மாவட்டங்கள் முழுவதும் கள ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால், இதனைப்பற்றி எல்லாம் எதுவும் புரியாமல் ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது மக்கள் நலனைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத எடப்பாடி பழனிச்சாமி எங்களை விமர்சனம் மக்கள் நலன் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கலைஞர் பெயரில் மக்களுக்குப் பயனில்லாத திட்டங்களுக்கு நான் ஒதுக்கி வருவதாகக் கூறுகிறார். அவர் சொல்லும்போது எனக்குச் சிரிப்பு வந்தது. பொய் சொல்லலாம் ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு பொய்க்கூடாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு புளுகுமூட்டையை அவர் அவிழ்த்து விடுகிறார்.
நம்மளுடைய நாட்டில் முக்கிய தலைவர் கருணாநிதி பெயரில் மக்கள் நலனுக்காக நான் செய்து வரும் விஷயங்களைப் பற்றி இதே மேடையில் பல மணி நேரம் பேசமுடியும். நான் இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கிறேன். எந்த திட்டத்தை மக்களுக்குப் பயனில்லாத திட்டம் என்று சொல்கிறீர்கள்? தமிழ் நாட்டின் வீர விளையாட்டுக்காகக் கலைஞர் அரங்கம் பயன்படாத திட்டமா? கலைஞர் மகளிர் தொகையில் மாதம் தோறும் 1000 மகளிர் பெற்று வரும் திட்டம் பயனில்லாத திட்டமா? எதைச் சொல்கிறீர்கள்?
நான் உறுதியாகவே சொல்கிறேன் உங்களுடைய ஆணவத்திற்காகத் தமிழ் நாட்டு மக்கள் உங்களைத் தோற்கடித்துக்கொண்டே தான் இருப்பார்கள். 80 ஆண்டுகள் ஓயாமல் தமிழ்நாட்டுக்காக உழைத்த தலைவர் கலைஞர் பெயரைத் திட்டங்களுக்கு வைக்காமல் வேறு யார் பெயரை வைக்கவேண்டும்? பதவி ஆசைக்காகக் கரப்பான்பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து போன உங்களுடைய பெயரையா வைக்க முடியுமா? கலைஞர் தான் எப்போதும் தமிழ்நாட்டைக் காக்கக் கூடிய காவல் அரண்” என எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்துப் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025