”கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ”10 மற்றும் 11ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்.
பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள். இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன, அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள், கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசுகையில், பொதுத்தேர்வு முடிவுகளில் ஆதிதிராவிடர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதை குறிப்பிட்டு, இது கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.