“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!
எனக்கு தம்பி விஜயை நன்றாக தெரியும். உள்நோக்கம் வைத்து செயல்படும் ஆள் அவர் இல்லை. யதார்த்தமான ஆள் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். விஜய் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி அகில இந்திய முஸ்லிம் ஜமாஆத் அமைப்பினர்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஜய் இப்தார் விருந்துக்கு குடிகாரர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களை அழைத்து வந்து இஸ்லாமியர்களை அவமதித்ததாக குற்றம்சாட்டினர். மேலும், விஜய்யின் திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதாகவும், இனி இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது என்றும், தமிழ்நாடு இஸ்லாமியர்கள் அவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். வேறு இஸ்லாமிய தரப்பினர் விஜய்க்கு ஆதரவு குரலும் தெரிவித்தனர்.
இப்படியான சூழலில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை, தம்பியை எனக்கு நன்றாக தெரியும் என விஜய்க்கு ஆதரவான சில கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ” எனக்கு தம்பியை நன்றாக தெரியும். அவ்வளோ தூரம் உள்நோக்கம் வைத்து செயல்படும் ஆள் அவர் இல்லை. யதார்த்தமான ஆள். இப்தார் விருந்தில் கலந்துகொள்ளுங்கள் என கூப்பிட்டு இருப்பாங்க. அவர் போயிருப்பார். அதற்கு இவ்ளோ தூரம் அறிக்கை விட வேண்டிய அவசியமில்லை. அது வேடிக்கையாக இருக்கிறது.
விஜயை பற்றி உங்களுக்கு தெரியாதா? எதோ பேசணும்னு பேசுறதுக்கு எல்லாமே நான் பதில் சொல்ல்லிக்கொண்டு இருக்க முடியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் தம்பியை தெரியும். மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என சிலர் பேசுவது தான் இதெல்லாம்.
இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த முறை இப்தார் விருந்துக்கு கூப்பிட்டால் அவர் வருவாரா? இதுக்கு தான் நான் எங்கேயும் போவது இல்லை. அங்கே ஒருநாள் இஸ்லாமாக வேஷம் போட்டு, தொப்பியை மாட்டிக்கொண்டு கஞ்சியை குடித்துவிட்டு, இந்த நாடகம் எத்தனை நாள் நடத்துவீங்க?
நான் மக்களின் உரிமைக்கனாவன். உயிரானவன். உணவுக்கானவன் அல்ல. அவங்க சாப்பிட கொடுத்தால் நான் சாப்பிடுவேன். அவ்வளவு தான். வாக்கு என்று ஒன்று இல்லை என்றால் நீங்கள் மதித்து போயிருப்பீர்களா? எல்லாரும் செய்யுறாங்கனு நானும் செய்யணும்னு விதி இல்லை. நான் அதனை தவிர்த்து கொள்கிறேன். நீங்கள் போய் ஏன் பங்கேற்கிறீர்கள் என யாரையும் விமர்சனம் செய்யவில்லை. அது அவர்கள் விருப்பம். மீண்டும் சொல்கிறேன். இதுபோன்ற குற்றசாட்டுகளை விஜய் மீது வைக்காதீர்கள்.” என விஜய்க்கு ஆதரவாகவும் சில விமர்சனத்தையும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.