டெண்டர் முறைகேடு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு கேவியட் மனு.!

டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ், கேவியட் மனு தாக்கல்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின், டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது 2018 ஆம் ஆண்டு திமுக அமைப்பு அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையில் 4800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கில், ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என கூறிய நிலையில், மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில் தனது தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டுமென கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.