மாநிலங்களவை எம்.பி. ஆக நாளை பதவியேற்பு.., டெல்லி புறப்பட்டார் கமல்ஹாசன்.!
மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்க உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள், நாளை (ஜூலை 25) பதவியேற்கினற்னர். திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக, நாளை (ஜூலை 25) பதவியேற்கின்றனர்.
இதில் குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசனும் நாளை (ஜூலை 25, 2025) மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
கமல்ஹாசன், திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் கடந்த ஜூன் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த புதிய பயணத்தை தனது நீண்டகால நண்பரான நடிகர் ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொண்டதாகவும், அவருடன் சந்திப்பு நிகழ்த்தியதாகவும் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், டெல்லி பயணத்திற்கு முன் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், ‘இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை, பெருமையோடு செல்கிறேன். நாடாளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது, உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்கவுள்ளேன். இந்த பயணம் தனது அரசியல் பயணத்தில் முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.