“அன்புமணியின் நடைப்பயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்பு” – ராமதாஸ் எச்சரிக்கை!
தொண்டர்களை சந்திக்கும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸின் “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” என்ற நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து, இதற்கு காவல்துறை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நடைபயணம் நாளை முதல் திருப்போரூரில் தொடங்கி நவம்பர் 1 வரை தருமபுரியில் நிறைவடைய உள்ளது. ராமதாஸ், தனது அனுமதியின்றி இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும், பாமகவின் பெயர் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். இது பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீடிக்கும் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ”பா.ம.க.-வின் தலைமை அலுவலகம் தைலாபுரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார். 30/05/2025 முதல் நான் தான் பாமகவின் புதிய தலைவராக உள்ளேன். தைலாபுரம் தோட்டத்தில் தான் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது வேறு எங்கும் இல்லை.
அன்புமணியின் பெயருக்கு பின்னால், என் பெயரை போடக்கூடாது என ஏற்கனவே கூறிவிட்டேன், தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும். அன்புமணி சுற்றுபயணத்தால் சட்ட ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளது. அன்புமணி சுற்றுபயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே அன்புமணியின் சுற்றுப்பயணத்தை காவல்துறை தடை செய்ய வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.