”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மே 5-ம் தேதியை 'வணிகர் நாள்' என்ற அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்டு வணிகர்களுக்கு மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ” தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய வணிகர்களுக்கு ‘ வணிகர் நாள்’ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மே 5-ம் தேதியை ‘வணிகர் நாள்’ என்ற அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார். மேலும், வணிகர்களுக்கு 6 அறிவிப்புகளை வெளியிட்டார்.
வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள் :
- வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
- உணவுப்பொருட்கள் விற்பனை, சேமித்தல் தொழில்கள் தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் இனி தொழில் உரிமம் வழங்கப்படும்.
- சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற மாநகராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போல, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் அமைக்கப்படும்.
- 9 சதுர மீட்டருக்கு மிகாமல் வைக்கப்படும் பெயர்ப்பலகைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
- வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் உருவாக்கப்படும். 22 சேவைகளை இதன் மூலம் வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
- மக்கள் நலன் கருதி 24 மணி நேரமும் கடை திறக்க வழங்கப்பட்ட அரசாணை ஜூன் 4ஆம் தேதியோடு முடியும் நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.