MBBS பொது கலந்தாய்வுக்கு தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் திட்டவட்டம்.!

MBBS பொது கலந்தாய்வுக்கு தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று சென்னையில் கூறியுள்ளார்.
MBBS எனும் இளங்கலை பொதுமருத்துவம் மற்றும் இளங்கலை பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு NEET மதிப்பெண் அடிப்படையில் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடைபெறும். அண்மையில் மத்திய அரசு அறிவித்த அறிவிபின் படி, 100 சதவீத பொது கலந்தாய்வை மத்திய தேசிய மருத்துவ முகமையின் கீழ் செயல்படும் இளங்கலை கல்வி வாரியம் நடத்தும் என அறிவிப்பு வெளியானது.
முன்னதாக, மாநில அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பிற்கான காலிப்பணியிடங்களில் 85 சதவீததையும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், நிகர் நிலை கல்லூரிகளில் உள்ள மருத்துவ இளங்கலை மாணவர் சேர்க்கையை அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதி செய்து வந்தனர். மீதம் உள்ள இடங்களில் (அரசு கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடம் போல) மத்திய அரசு கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் மத்திய அரசின் 100 சதவீத பொது கலந்தாய்வு முடிவு மாநில அரசுகள் சார்பில் கடும் எதிர்ப்பை உண்டாக்கின. இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு ஆட்சேபனை கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
தற்போது தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். இன்று சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார்.
அப்போது அமைச்சர் பேசுகையில், மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அப்படி பொது கலந்தாய்வு நடைபெற்றால், தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்த கிராமப்புற அரசு பள்ளி ஏழை மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீடு பாதிக்கப்படும். அதிநவீன வசதிகள் கொண்ட சென்னை மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உருவாகும்.
வெளி மாநிலத்திற்கு உள்ள மாணவர்கள் சென்னை கல்லூரிகளில் படிக்க நேரிடும். இது ஜனநாயகத்திற்கு புறம்பானது. தமிழக அரசு கோரிக்கை வைக்கும் போது, இந்தாண்டு பொது கலந்தாய்வு இருக்காது என சொன்னார்கள். ஆனால்,தற்போது மீண்டும் அறிவித்து உள்ளார்கள். பொது கலந்தாய்வை தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.