வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!
UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் என்பவர் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 23வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன் மாதம் (Prelims) மற்றும் செப்டம்பர் 2024 (முதன்மை தேர்வு) ஆகியவை நடைபெற்றது. பிறகு 2025 ஜனவரியில் நேர்காணல் நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று (ஏப்ரல் 22) வெளியாகியுள்ளது.
அதில், மொத்தம் 1009 பேர் அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் 335 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பை சேர்ந்த EWS பிரிவில் 109 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சக்தி துபே எனும் பெண் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை சிவச்சந்திரன் என்பவர் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 23ஆம் இடமும் பிடித்துள்ளார். இவர் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று தேர்ச்சி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் தேர்வு எழுதி காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.