”எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கல.., பா.ஜ.க பிடியில் அதிமுக சிக்கியுள்ளது” – திமுகவில் இணைந்த அன்வர் ராஜா.!
அதிமுக தன்னுடைய கொள்கையில் இருந்து தடம்புரண்டு, பாஜகவின் கையில் சிக்கி இருக்கிறது என்று திமுகவில் இணைந்தபின் அன்வர்ராஜா பேட்டி அளித்துள்ளார்.

சென்னை : முன்னாள் அதிமுக எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா இன்று திமுகவில் இணைந்தார். இவர் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என விமர்சித்திருந்தார். இதனால், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கினார்.
இதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பின் அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ”இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். என் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப் பார்த்தேன், அவர்கள் கேட்கவே இல்லை. பா.ஜ.க. கையில் அ.தி.மு.க. சிக்கியுள்ளது, அ.தி.மு.க.வை சீரழிப்பதற்குதான் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்துள்ளது. எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும் அக்கட்சியை அழிப்பதே பா.ஜ.க.வின் நோக்கம்.
பாஜக ஒரு நெகடிவ் சக்தி தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்க மாட்டார்கள். அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைந்தாலும் 10 நாட்களில் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆகிடுவார். அதிமுக தன்னுடைய கொள்கையில் இருந்து தடம்புரண்டு, பாஜகவின் கையில் சிக்கி இருக்கிறது.
3 முறை பேட்டி அளித்த அமித் ஷா ஒரு இடத்தில் கூட முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என கூறவில்லை. NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், அக்கூட்டணியில் பாஜக இடம்பெறும் என்றுதான் சொல்கிறார். ஆனால், நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதைப் போல நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று 10 நாட்களாக கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கூறியிருக்கிறார்.