கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 மாணவர்கள் தற்கொலை , உரியமுறையில் திட்டமிட வேண்டும் – கனிமொழி

ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், கடந்த வாரத்தில் மட்டும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது வேதனைஅளிப்பதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டுநன்னாவரம் ஊரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரு மூன்று மகள்கள். வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்பிற்கு மூவருக்கும் சேர்த்து ஒரே செல்போன் வாங்கித் தந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூத்த மகள் நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கருத்தப்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளியில் +1 வகுப்பு படிக்கும் விக்கிரபாண்டி என்ற 15 வயது மாணவன் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரித்து வருகிறது. உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ, தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.ஆன்லைன் வகுப்புகள் குறித்து உரியமுறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதல்களோடு அது செயல்படுத்தப்பட்டு, மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் குறித்து உரியமுறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதல்களோடு அது செயல்படுத்தப்பட்டு, மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 3, 2020