முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து ஓபிஎஸ் ஓபன் டாக்.!
அடையாறு பூங்காவில் காலை நடைபயிற்சி சென்றபோது, முதல்வர் ஸ்டாலினுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு தியோசோபிகல் சொசைட்டி பூங்காவில் காலை நடைபயிற்சியின் போது ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.
இது ஒரு தற்செயலான சந்திப்பாகக் கருதப்படுகிறது, இதில் ஓபிஎஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து விலகிய சில மணி நேரங்களில் இது நடந்தது.
ஓபிஎஸ் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், “நான் நடைபயிற்சி செல்லும் போது முதலமைச்சரும் நடைபயிற்சியில் இருந்தார், அதனால் வணக்கம் தெரிவித்துவிட்டு சென்றேன்,” என்று தெரிவித்தார்.
இதனிடையே, NDA கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ள ஓபிஎஸ்-ன் அடுத்த திட்டம் என்ன என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தில் தனியாக கட்சி ஒன்றை பதிவு செய்து வரும் தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.