பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்குப் பெருமை – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஜூலை 27, 2025 அன்று நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த விழாவில், பிரதமர் மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுவார். இது தமிழகத்திற்கு பெருமை அளிக்கும் தருணமாக உள்ளதாக, தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” ராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பு மற்றும் கடல் கடந்த படையெடுப்பின் 1,000-வது ஆண்டை குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 27ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரத்து வருகை தர உள்ளார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள பெருமையாகும்” என நெகிழ்ச்சியுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்த முப்பெரும் விழா, ராஜேந்திர சோழனின் பிறந்தநாள், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் கட்டுமான ஆயிரமாவது ஆண்டு, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அவரது கடல்சார் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, ஜூலை 26 அன்று கேரளாவில் அரசு விழாவில் பங்கேற்ற பின்னர், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இரவு 7:50 மணிக்கு வருகை தருவார். அங்கு புதிய முனைய திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு, இரவு 10:35 மணிக்கு திருச்சி சென்று அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவார். மறுநாள் காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருவார்.
விழாவில், பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டு வரும் கங்கை நீரைப் பயன்படுத்தி, பிரகதீஸ்வரர் கோவிலில் மகா அபிஷேகம் செய்வார், சுவாமி தரிசனம் செய்து, சில நிமிடங்கள் தியானம் செய்வார். மேலும், கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறையின் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுவார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் இவ்விழாவில் இடம்பெற உள்ளது. இந்த விழாவை தமிழக அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அரசு விழாவாகக் கொண்டாடுகிறது, மேலும் முதல்வரும் இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், இரா.இராஜேந்திரன், சா.சி.சிவசங்கர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி உள்ளிட்டோர் இவ்விழாவைத் தொடங்கி, கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினர். அமைச்சர் தங்கம் தென்னரசு, “ராஜேந்திர சோழனின் படைபலம், நிர்வாகத் திறன், நீர் மேலாண்மை ஆகியவை உலகளவில் புகழ்பெற்றவை. இந்த விழாவில் பிரதமர் பங்கேற்பது, தமிழர்களின் பண்பாட்டு பெருமையை உலகுக்கு எடுத்துச் செல்லும் தருணமாக அமையும்,” என்று கூறினார்.
மேலும், இந்த விழாவிற்காக, அரியலூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோர், பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை ஆய்வு செய்தனர். ராஜேந்திர சோழனின் சோழகங்கம் ஏரியை சுற்றுலா தலமாக்க ரூ.7.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் மாளிகைமேடு பகுதியில் அகழாய்வுகள் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.